ஆஷஸ் டெஸ்ட்: பர்ன்ஸ் சதத்தால் இங்கிலாந்து முன்னிலை

9 வது விக்கெட்டுக்கு கிறிஸ் வோக்சும், ஸ்டூவர்ட் பிராட்டும் அணியின் ஸ்கோர் 350 ரன்களை கடக்க உதவினர்.

ஆஷஸ் டெஸ்ட்: பர்ன்ஸ் சதத்தால் இங்கிலாந்து முன்னிலை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆ‌ஷஸ் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 374 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 284 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டை யும் இழந்தது. ஸ்டீவ் ஸ்மித் 144 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 125 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து, ரோரி பர்ன்ஸ் 133 ரன்களில் லியான் சுழலில் வீழ்ந்தார். அடுத்து வந்த பேர்ஸ்டோ 8 ரன்களிலும், மொயீன் அலி டக் அவுட் ஆகியும் வெளியேறினர். ஆனால், 9 வது விக்கெட்டுக்கு கிறிஸ் வோக்சும், ஸ்டூவர்ட் பிராட்டும் கைகோர்த்து அந்த அணியின் ஸ்கோர் 350 ரன்களை கடக்க உதவினர். பிராட் 29 ரன்களிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 374 ரன்கள் குவித்தது. கிறிஸ் வோக்ஸ் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமால் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் லியான், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், பேட்டின்சன், சிடில் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

90 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பேன்கிராஃப் டும் (7 ரன்) வார்னரும் (8) வந்த வேகத்திலே திரும்பினர். அடுத்த கவாஜா 40 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 46 ரன்களுட னும் ஹெட் 21 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.  நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன் கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.