கொரோனா வைரஸ்: மலேசியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

சிகிச்சை பெற்று வரும் மொத்த நோயாளிகளில் 94 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 62 பேருக்கு செயற்கை சுவாச உதவி அளிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ்: மலேசியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
Singapore has higher recovery rate

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் சீராக அதிகரித்து வரும் நிலையில், மலேசியாவில் அத்தொற்றில் இருந்து விடுபடுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது அரசுக்கும் மக்களுக்கும் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 91 பேர் சிகிச்சைக்குப் பின்னர் கொரோனா கிருமித் தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மலேசிய சுகாதார அமைச்சகம் அறிவித்தது.

நேற்று ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் புதிய உச்சத்தை தொட்ட மலேசியா இன்று ஒரே நாளில் குணமடைந்தோரின் எண்ணிக்கையிலும் புதிய உச்சத்தை எட்டிப்பிடித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைச்சகத்தின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இதுவரை குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 479 என்றும், இது நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளில் 18.2 விழுக்காடு என்றும் சுட்டிக்காட்டினார்.

156 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டன்ர்; பலி எண்ணிக்கை 37 ஆனது

மலேசியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 156 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை, 2,626.

சிகிச்சை பெற்று வரும் மொத்த நோயாளிகளில் 94 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 62 பேருக்கு செயற்கை சுவாச உதவி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 57 மற்றும் 46 வயதுடைய இரு பெண்களும், 47 வயது ஆடவரும் சிகிச்சை பலனின்றி பலியானதாக டாக்டர் நூர் ஹிஷாம்தெரிவித்தார். இதற்கிடையே கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென அடையாளம் காணப்பட்டுள்ள மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 3994 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
"சுகாதார அமைச்சகத்தின் பயிற்சி மையங்களை தனிமைப்படுத்தும் தற்காலிக மருத்துவ மையங்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு மேலும் பல இடங்களை அடையாளம் கண்டு வருகிறோம்.

"சுகாதார அமைச்சகத்தின் பயிற்சி மையங்கள் மூலம் கூடுதலாக 1,937 படுக்கைகளை அமைக்க முடியும். முன்பு கொரோனா கிருமித் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 57ஆக இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 13 மையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கிருமித் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் 26இல் இருந்து தற்போது 38ஆக அதிகரித்துள்ளது. இவற்றுள் 7 மருத்துவமனைகளில் கொரோனா கிருமித் தொற்றுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும்" என்று டாக்டர் நூர் ஹிஷாம்தெரிவித்தார்.

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் நீட்டிக்கப்படுமா?
மலேசியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படுமா என்பது பொதுமக்கள் ஒழுங்குடன் நடந்துகொள்வதைப் பொறுத்துள்ளது என்றும் சுகாதார அமைச்சின் பொது ஆணையர் நூர் ஹிஷாம்தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 நோய்த் தொற்றானது ஒரு சங்கிலித் தொடர் போன்று பரவும் தன்மை கொண்டது. எனவே, அந்தச் சங்கிலித் தொடரைத் துண்டிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவே பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் வீட்டிலேயே இருந்தால்தான் இந்த முயற்சி சாத்தியமாகும்.

மேலும் விவரங்களை அறிந்துக்கொள்ள கிளிக் செய்யவும் 

Source: https://www.bbc.com/tamil/global-52094249