கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

கோடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு குறைந்தால், மீண்டும் குளிர் பருவத்தில் அதன் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
Covid 19

உலகம் முழுக்க அறிவியலாளர்கள் வியக்கத்தக்க அளவில் முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும், நாம் இன்னும் நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பல கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நாம் இருக்கிறோம்.

சில முக்கியமான கேள்விகள் இங்கே தரப்பட்டுள்ளன.

1. எத்தனை பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது?
இது மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று. ஆனால் மிகவும் முக்கியமானவற்றில் ஒன்று.

உலகம் முழுக்க பல லட்சம் பேருக்கு இந்தப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையாகத்தான் இது இருக்கும்.

இந்த வைரஸ் பாதிப்பு இருந்தாலும், உடல் நலிவுறவில்லை என்பது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாத எண்ணற்றவர்களைக் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

ஒருவருக்கு நோய்ப் பாதிப்பு உள்ளதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கான பரிசோதனை முறை உதவியாக இருக்கும்.

2. உண்மையில் இது எந்த அளவுக்கு உயிர்ப்பலி வாங்கக் கூடியது?
எவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்பது நமக்குத் தெரியாத வரையில், மரண விகிதம் பற்றி நிச்சயமாகக் கூறுவது சாத்தியமற்றது. இப்போதைக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 1 சதவீதம் பேர் மரணம் அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நோய் அறிகுறி தென்படாதவர்கள் அதிகமாக இருந்தால், மரண விகிதம் இன்னும் குறைவாக இருக்கும்.

3. முழுமையான அறிகுறிகளின் பட்டியல் என்ன?
கொரோனா வைரஸ் தாக்குதலின் பிரதான அறிகுறிகளாக - காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் உள்ளன. இவற்றைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும்.

உலர்ந்த தொண்டை, தலைவலி மற்றும் வயிற்றுப் போக்கு பாதிப்புகளும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வாசனை அறியும் தன்மை குறையக்கூடும் என்றும்கூட சில அனுமானங்கள் கூறுகின்றன.

ஆனால் லேசான சளி போன்ற அறிகுறிகள், மூக்கு ஒழுகுதல் அல்லது தும்மல் ஆகியவை சில நோயாளிகளுக்கு இருப்பதாகச் சொல்வதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது.

இதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், வைரஸ் தாக்குதல் இருந்தாலும் தங்களுக்கு தொற்று பரவியுள்ளது என்பதை மக்கள் அறியாமல் இருப்பார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4. தொற்று பரவலில் சிறுவர்களின் பங்கு என்ன?
சிறுவர்களுக்கு நிச்சயமாக கொரோனா வைரஸ் தாக்கும். இருந்தாலும், அவர்களுக்கு லேசான அறிகுறிகள் தோன்றலாம். முதிய வயதினருடன் ஒப்பிடும்போது, குழந்தைகளில் இந்த நோயால் ஏற்படும் மரண விகிதம் குறைவாகத்தான் உள்ளது.

ஒரு நோய் பரவுதலுக்கு குழந்தைகள் அதிக காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் நிறைய பேருடன் (பெரும்பாலும் விளையாட்டு மைதானங்களில்) கலந்து பழகும் வாய்ப்பு இருப்பதும் இதற்கு ஒரு காரணம். ஆனால், இந்த வைரஸ் தாக்குதலைப் பொருத்தவரையில், குழந்தைகள் மூலம் எந்த அளவுக்குப் பரவும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

5. உண்மையில் இது எப்படி தொடங்கியது?
இந்த வைரஸ் 2019 இறுதியில் சீனாவில் வுஹானில் வெளிப்பட்டது. அங்கு இறைச்சி அங்காடியில் நிறைய பேருக்கு இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டது.

அதிகாரப்பூர்வமாக சார்ஸ்-சி.ஓ.வி.-2 என கூறப்படும் இந்த கொரோனா வைரஸ், வெளவால்களுக்குத் தொற்றக் கூடிய ஒருவித வைரஸ்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இருந்தபோதிலும், வெளவால்களில் இருந்து வேறொரு விலங்கினத்துக்கு இது பரவி, அதில் இருந்து மனிதர்களுக்குப் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆரம்பம் எது என்பது இன்னும் தெரியவில்லை. வெளவால்களிடம் இருந்து தொற்று பரவிய அந்த விலங்கினம், இதை மேலும் பரப்பும் வாய்ப்பு கொண்டதாகவும் இருக்கலாம்.

மேலும் விவரங்களை அறிய கிளிக் செய்யவும் 

Source:https://www.bbc.com/tamil/global-52082404